இந்தியாவில் மீண்டும் ₹1,000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரவிருப்பதாகச் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. மஞ்சள் நிறத்தில் கோவில் உருவம் பொறிக்கப்பட்ட புதிய ₹1,000 ரூபாய் நோட்டின் படங்கள் எக்ஸ் (ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கி (RBI) இந்த புதிய நோட்டை விரைவில் வெளியிடப்போகிறது என்றும் சில பதிவுகள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை.
PIB Fact Check வெளியிட்ட விளக்கம்
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தப் புதிய ₹1,000 நோட்டு தொடர்பான வதந்திகளுக்கு ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ உண்மை அறியும் பிரிவான PIB Fact Check தெளிவான விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ₹1,000 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இணையத்தில் உலா வரும் தகவல் முற்றிலும் போலியானது மற்றும் ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது.
பணப் பரிவர்த்தனைகள் அல்லது புதிய நோட்டுகள் தொடர்பான எந்தவொரு அறிவிப்பையும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தளம் மூலமாக மட்டுமே சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னணி: 1000 ரூபாய் நோட்டு நிறுத்தப்பட்டது எப்போது?
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புழக்கத்தில் இருந்த பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அதற்குப் பதிலாகப் புதிய ₹500 நோட்டுகள் மற்றும் புதிய ₹2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ₹1,000 நோட்டு மீண்டும் அச்சிடப்படவில்லை.
அதன்பின்னர், மே 2023-இல் ‘தூய்மை நோட்டு கொள்கை’ (Clean Note Policy) அடிப்படையில் ₹2,000 நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போதே ₹1,000 நோட்டுகள் மீண்டும் வரக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்தன. எனினும், ₹1,000 நோட்டை மீண்டும் கொண்டுவரும் எந்தத் திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று அப்போதே தெளிவுபடுத்தப்பட்டது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள்
ரிசர்வ் வங்கியின் ‘மகாத்மா காந்தி (புதிய) வரிசை’யின் கீழ் தற்போது பின்வரும் ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளன:
- ₹10
- ₹20
- ₹50
- ₹100
- ₹200
- ₹500
எனவே, இணையத்தில் பரவும் ₹1,000 நோட்டு புகைப்படம் எடிட் செய்யப்பட்ட அல்லது ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான படமாகும். ஒன்றிய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ அத்தகைய முடிவை எடுக்கவில்லை.
புதிய ₹1000 நோட்டு வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதா?
இல்லை. புதிய ₹1000 ரூபாய் நோட்டை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி மற்றும் PIB Fact Check தெளிவுபடுத்தியுள்ளன.
தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்தில் உள்ள அதிகபட்ச பணத்தாள் எது?
தற்போது வழக்கமான புழக்கத்தில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் அதிகபட்ச மதிப்புள்ள பணத்தாள் ₹500 நோட்டு மட்டுமே.